ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (27.02.23) காளை 7 மணிக்கு தொடங்கு மாலை 6 மணிவரை நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்தும் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைத்து நபர்கள், கட்சி சார்ந்தவர்களை வெளியேறும்படி தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இடைத்தேர்தல்:


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 18ம் தேதி வெளியானநிலையில், கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதிநாளான அன்று மட்டும் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய  வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.


இடைதேர்தலில் போட்டியிட மொத்தமாக 96 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு, 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 10ம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், 77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர். 


அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்: 


திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.


அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது.  ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டார், அதேபோல் அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.


தீவிர கண்காணிப்பு:


தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்வடைந்ததையடுத்து, நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் 238 வாக்குச்சாவடிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. அதேபோல், பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ள 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். 


வாக்காளர்கள் எண்ணிக்கை:


தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். 


ஆண்கள் - 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர். 


பெண்கள் - 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர்


இந்த வாக்களர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.