Thevar Jayanthi: தேவர் ஜெயந்தி, குருபூஜையை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று தென்மாநிலத்தில் குவிகின்றனர்.


தேவர் ஜெயந்தி, குருபூஜை:


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர்.அவர் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அன்பை பெற்றிருந்தார். அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். 


பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதில் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கம். வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இது பெரும் விழாவாகாவே கொண்டாடப்படுகிறது.


மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்:


117வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜையில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவே முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். தொடர்ந்து, இன்று கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர்  சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்த உள்ளார். அதன்பிறகு சாலை மார்க்கமாக பசும்பொன்னை அடைந்து, அங்கு தேவர் நினைவிடம் மரியாதை செலுத்த உள்ளார்.


குவியும் அரசியல் தலைவர்கள்:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இன்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 


பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:


பசும்பொன்னில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர் குவிவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுதும், 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பசும்பொன்னில், கண்காணிப்பு பணியில், ஆளில்லா விமானம், 19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கேமராக்கள உள்ளன. போலீசாரால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே, முந்தைய அதிமுக அரசு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்கி இருந்தது. குருபூஜையையொட்டி தங்க கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் அதன் அருகில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.