கடலூர் மாவட்டம் வடலூரில் சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை அமைந்துள்ளது. வள்ளலார் மூலம் அமைக்கப்பட்ட சபை. எல்லா உயிர்களும் சமம், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று கூறியவர் வள்ளலார்.


இந்த நிலையில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடல் பாடிய வள்ளலார் அவர்கள் வடலூர் பகுதியில் நிறுவிய சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையில் மக்கள் பலர் தினமும் வந்து தியானம் செய்வது, வழிபாடு நடத்துவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த இடத்தில் வெகுவிமர்சையாக ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. இதனை காண சாதி மதம் கடந்து அனைவரும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.


இந்த நிலையில் சத்தியஞானசபையில் சுற்றியிருக்கும் மைதானம் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திடீரென 22 ஆம் தேதி காலை பயிற்சிகளை மேற்கொண்டனர். திடீரென அங்கு வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மத ரீதியான உறுதிமொழிகளை மேற்கொண்டனர். அதன்பின் அங்கேயே சிலம்பம் பயிற்சிகளையும் மேற்கொண்டனர். சில நிமிடங்கள் இவர்கள் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மதம் சார்ந்த சில கருத்துக்களையும் இவர்கள் அங்கு பேசி உள்ளனர்.


இவர்கள் நெய்வேலி, காடாம்புலியூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்கு தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இப்படி நின்று பயிற்சி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களிடம் சென்ற மக்கள்.. இது வள்ளலார் மண். இங்கு மத பிரிவினைக்கு இடம் இல்லை. சாதி, மதம் ரீதியான கருத்துக்களுக்கு இடம் தர முடியாது. வள்ளலார் அதை எல்லாம் கடந்தவர். இந்த இடம் அமைதியான ஒன்று. இங்கே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வந்து பயிற்சி எல்லாம் செய்ய கூடாது. இங்கிருந்து உடனே வெளியேறுங்கள் என்று மக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களிடம் கூறி உள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கிருந்து வெளியேறாமல் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த வடலூர் காவல் துறையினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் பேசி, அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.






இந்தநிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை வள்ளலார் சபை மைதானத்தில் இருந்து வெளியேற்றியதால் ஆத்திரமடைந்த வடலூர் வள்ளலார் திடலில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களும் ஒன்றிணைந்து யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் பயிற்சியை அந்த இடத்தில் நேற்று மேற்கொண்டனர்.


 இதனால் எப்போதும் அமைதியாக காணப்படும் இந்த வடலூர் வள்ளலார் சபை கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப் பட்டு வருகிறது உடனடியாக மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்தப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.