கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளர்கள், கதிர்வீச்சாளர், ஆய்வக நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 73 பணியிடங்களுக்கான நேர்காணல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர் இதில் கல்லூரி முடித்த மாணவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை இதில் அடங்குவர்.



நேர்காணலுக்காக வந்தவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தினால் தனிமனித இடைவெளி இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே இடத்தில் ஆயிரகணக்காணோர் அமர வைக்கப்பட்டதால் தொற்று பரவும் அபயாம் ஏற்பட்டுள்ளது.


கொரோனா தொற்று  மூன்றாவது அலை எச்சரிக்கை இருக்கும் நிலையில் மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை அந்தந்த பகுதிக்குட்பட்ட மருத்துவமனைகள் அல்லது சுகாதாரத்துறை அலுவலங்களிலேயே நடத்தி இருக்கலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை முன்னரே பெற்றுக்கொண்டு பகுதிவாரியாக நேர்காணல் நடத்தி இருக்கலாம் என நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறினர்.



தகவலறிந்து நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேர்காணலுக்கு வந்தவர்களின் விண்ணப்பப் படிவங்களை பெற்று கொண்டு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.



இதுபோன்று முன்னெச்சரிக்கை இல்லாமல் நேர்காணலை அறிவிக்காமல் திட்டமிட்டு அறிவித்திருந்தால் தொலைவில் இருந்து இதற்காக வந்து செல்பவர்களுக்கு சுலபமாக இருந்திருக்கும், ஆனால் இப்பொழுது மிக தொலைவில் இருந்து வந்தும் உபயோகம் இல்லாமல் திரும்பிச் செல்வது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.