கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக சக்கரபாணி அல்லது நேரு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி சிறையில் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரும் நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தை கவனிக்க புதிய பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
கரூர் மாவட்டம் கொங்கு வேளாள சமுதாயத்தை பெரும்பான்மையாக கொண்ட இடம் என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்தவரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவருமான உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் அந்த மாவட்ட களத்தில் செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் 4 சட்ட சபை தொகுதிகளை கொண்ட கரூர் மாவட்டத்தில் இன்னும் வீரியமாக செயல்பட்டு வெற்றியை பெற்றுதர திமுக முதன்மை செயலாளரும், நகர்புற நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவை நியமிக்கலாமா என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போது நேரு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், சக்கரபாணி கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு உள்ளது
அதேபோல, கரூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜி வெளியே வரும் வரை அவருக்கு மாற்றாக திமுக மாவட்ட பொறுப்பாளராக வேறு ஒருவரை நியமிக்கவும் திமுக தலைமை யோசித்துள்ளது.
நேரடியாக திமுக மாவட்ட பொறுப்பாளரை நியமிக்கமால், மாவட்ட பொறுப்பு குழு அமைத்து அதற்கு ஒரு தலைவரை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது.இதற்கு மாநில நெசவாளர் அணி செயலாளராகவும் ஏற்கனவே கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றிய நன்னியூர் ராஜேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இவர் மட்டுமின்றி, திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் பரணி மணி, வக்கீல் மணிராஜ், கரூர் வடக்கு நகர செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளவரசு உள்ளிட்டோர் போட்டியில் இருக்கின்றனர்.
கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் யாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சராகிறாரா எம்.எல்.ஏ இளங்கோ..?
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோவும் திமுக மாவட்ட பொறுப்பாளர் பதவி ரேசில் உள்ளார். ஒருவேளை செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டால், அந்த மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது