வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல் வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு, மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைகளின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



  • பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 29.11.2023 அன்று, நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செய்வது, 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

  • ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள, மீன் பிடிப்படகுகள் 29.11.2023-க்குள் கரைக்குத் திரும்புமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு கரையில் இருந்த அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. 

  • இதுமட்டுமின்றி, மேற்குக் கரையில், 477 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. மேலும், கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கும் திரும்புமாறும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும், பொது மக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கையும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. 

  • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினை தயார் நிலையில் வைத்திட முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

  • கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

  • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர். 

  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. 

  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. 

  • புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • நேற்று (29.11.2023) முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர்  வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. 

  • இன்று (30.11.2023) காலை 8.00 மணி முதல் புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. 

  • பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

  • பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், தமிழ்நாடு கமாண்டோ படையினைச் சார்ந்த 50 வீரர்கள் கொண்ட 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 25 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

  • சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.