மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதிக்குள் விடப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தமிழக, கேரள எல்லையில் பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.


கடந்த 27-ந்தேதி அந்த யானை யாரும் எதிர்பாராத நிலையில் கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. பின்னர் அங்கிருந்து சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி வழியாக சென்று சண்முகாநதி அணை பகுதியில் முகாமிட்டிருந்தது. கடந்த 7 நாட்களாக அரிக்கொம்பன் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது.  இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை பிடிக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.


நேற்று இரவு அரிகொம்பன் யானை சின்னஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோயில் மலைப்பகுதியில் உலா வந்ததை கண்காணித்து வந்த வனத்துறையினர் இதனை அடுத்து யானையை மயக்க ஊசி செலுத்த ஏதுவான இடம் அமைந்ததால் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளை சின்ன ஓவுலாபுரம் பகுதிக்கு வரவழைத்து கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.


இந்நிலையில் தேனியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனுவில், “ கடந்த 27.04.2023 முதல் கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அரிக்கொம்பன் என்ற யானை கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றி வருகிறது. கேரளா உயர்நீதிமன்றம் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள கேரளா வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரிக்கொம்பன் யானையினால் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பொருட்கள் மற்றும் மனிதர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.


எனவே, தேனி வன அலுவலர், குழு ஒன்றை ஏற்படுத்தி யானையினால் ஏற்பட்ட சேதத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவும், அரிசிக்கொம்பன் யானையை பிடித்து கேரளா அரசிடம் ஒப்படைக்கவும் மீண்டும் அரிசிக்கொம்பன் யானை தமிழ்நாட்டிற்கு வர விடாத வண்ணம் கேரளா அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கேரளா அரசு இதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில் வனவிலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருள்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் யானையை வேட்டையாட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 


இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதம் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும் யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாலேயே அவை ஊருக்குள் நுழைகின்றது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.