தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.    பாதுகாப்பு காரணங்களுக்காக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணி இறுதி கட்டத்தை நெறுங்கி உள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 


முன்னதாக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். அமைச்சர் தனது அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு நடப்பாண்டில் மூடப்படும் என்று அறிவித்து இருந்தார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பின் படி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.