தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்து, வடமொழி கலப்பின்றி தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் ஊக்குவித்த மறைமலையடிகளின் மகன் மறை பச்சையப்பன், வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் வறுமையில் தவித்து வருகிறார். 


தமிழ் மொழியில் அதிகப்படியான வடமொழி கலப்பு இருந்த நிலையில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர் தமிழறிஞர் மறைமலையடிகள், வேதாசலம் என்ற தனது பெயரை மறைமலையடிகள் என தனித்தமிழில் மாற்றியதுடன், இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றியதுடன் திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல அரிய தமிழ்நூல்களை வெளியிட்டார். அதோடு, மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல் நிலையத்தையும் உருவாக்கினார். 



75 வயதாகும் மறைமலைஅடிகளாரின் மகன் மறை பச்சையப்பனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டில் ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பில் 2,500 ரூபாய் வாடகையில் வீடு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மறை பச்சையப்பன் வசிக்கும் வீட்டின் வாடகையானது 4,575 ரூபாயாக உயர்த்தப்பட்டது. முன்னதாக கட்டட வேலை பணியின் போது இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிந்த காரணத்தினால் மறை பச்சையப்பனால் வேலைக்கு  கூட செல்ல முடியாத நிலை இருந்தது.



மேலும் ,கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த முடியாததாலும் அதனால் வாடகை நிலுவைக்கான வட்டித்தொகை, பராமரிப்பு செலவு என அனைத்தும் சேர்த்து 34,375 ரூபாயை வீட்டுவசதி வாரியத்திற்கு தந்தாக வேண்டிய சூழல் மறை பச்சையப்பனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய வறுமை நிலை குறித்து அரசிற்கு மறை பச்சையப்பன் மனு அளித்திருந்த நிலையில் அன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மறை பச்சையப்பன் குடியிருக்கும் வீட்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாடகை விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மறை பச்சையப்பன் வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 34,375 ரூபாயை திரும்ப செலுத்தினால் மட்டுமே துணை முதல்வர் அறிவித்த வாடகை விலக்கை முழுமையாக பெறமுடியும் என்று அதிகாரிகள் கூறியதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளார் மறை பச்சையப்பன். 



இந்த நிலையில் தற்போது வசிக்கும் குடியிருப்பில் தொடர்ந்து வசிப்பதற்காக அரசு அலுவலகங்களுக்கு மனு எழுதி அனுப்பி கொண்டிருக்கும் மறை பச்சையப்பன், தமிழறிஞர்களை காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு  உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்.


உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த தனது மகனுக்கு கடந்த அரசின் சார்பில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிக வேலை அளித்த நிலையில், அங்கு தனது மகனுக்கு கிடைக்கும் வருவாய் தனியாக வசிக்கும் அவரது குடும்பத்திற்கே போதுமானதாக உள்ளதால் தன்னை சரியாக கவனிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மறைமலையடிகளாரின் மகன் மறை பச்சையப்பன் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார்.


’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வரிகளை தன் வாழ்நாள் முழுவதும் தாங்கி நின்ற மறைமலை அடிகளின் மகன் வாடுவதை தமிழ்நாடு அரசு பார்த்து நிற்காமல், உடனடியாக அவருக்கு உதவவேண்டும் என்று தமிழறிஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.



இது தொடர்பான செய்தியானது தமிழ் பண்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மறைமலைஅடிகளின் மகன் மறை பச்சையப்பன் வறுமையில் வாடுவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று, உடனடியாக உதவி செய்யப்படும் என ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததுடன் வறுமையில் வாடும் முதியவர் மறை பச்சையப்பனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.