தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 14,091 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தியும், அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கு 109 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.


பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி பணி இடங்களில் 8,347 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தற்காலிக அடிப்படையில் மதிப்புரியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினர்.


நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு பெற்ற தகுதி உள்ள ஆசிரியர்கள் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் கடந்த நான்கு மாதமாக வழங்கப்படாமல் இருந்தது.


தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு ரூ.109,91,52,000/- நிதி ஒப்பளிப்பு வழங்க ஆணை வெளியிடப்பட்டது.


வரும் ஆண்டுகளில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவர்களின் நலனை கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் நிரப்பப்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் தவிர்த்து மீதி உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.