நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் கூறப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி விருச்சிக லக்கினத்தில் அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 263 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கோயிலின் மூன்றம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதன் பின்னர் ராஜகோபுரம் எதிரே உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைபெற்று வந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமூர்த்திகள் தேரினை வடம் பிடிப்பது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு 7ஆம் நாள் திருவிழா மாடவீதிகளில் நடைபெறாமல் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்றது. இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு கோவிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோவில் ஊழியர்களால் பஞ்சமூர்த்திகள் தோளில் சுமந்து வந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகர், பாலசுப்பிரமணியர் சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் குடைகளைப் பிடித்தவாறு திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிறிது தூரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து வந்தனர். அதன்பின் தேரை டிராக்டர் உடன் இணைத்து பஞ்சமூர்த்திகளும் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கணிசமான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினர். 10ஆம் நாள் திருவிழா நடைபெறும் வரும் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலின் கருவறையின் முன்பு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த தீப திருவிழாவை காண வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஆன்மிக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அன்றைய தினம் பௌர்ணமி தினம் என்பதால் பௌர்ணமி கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.