சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து இன்று காலை சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் இறைராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து அவர் உடனடியாக பேருந்தை நிறுத்த முயற்சித்ததில் பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவ்வழியாக வந்த சக வாகன ஓட்டிகள் சாலையில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாழப்பாடி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுனர் உட்பட 3 பேர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் முதல்வர் மணி நேரில் சென்று விபத்துக்குள்ளானவர்க்கு ஆறுதல் கூறினார்.


சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தை வாழப்பாடி காவல் துறையினர் கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.


காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை


மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம், சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.