Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, திமுக அமைச்சர்களான, உதயநிதி ஸ்டாலின், நேரு, பொன்முடி, மா.சுப்ரமணியன் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தனர். அதையடுத்து வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அதற்கு முன்னர், முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், ”விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், திமுக கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள் அதாவது, ஜூன் 16ஆம் தேதி மத்திய அரசை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுக தரப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் திமுக எம்.பி. வில்சன் ஆகியோர் மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர். இதில் மிகவும் முக்கியமான முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் குறித்தும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.