தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, ஈரோடு மாவட்டம், கொடுமணல், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை என ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுவருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வில் இரண்டு உறைகிணறுகள் வெளிப்பட்டுள்ளன. ஏழாம் கட்ட கீழடி அகழாய்வு கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதில் பகடைக்காய், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள் நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, சுடுமண் மணிகள், காதணி, கண்ணாடி மற்றும் சங்குகளினால் செய்யப்பட்ட வளையல்கள், கண்ணாடிகளால் செய்யப்பட்ட குறு மணிகள் போன்ற அணிகலன்கள், சூதுபவளம் படிகம் போன்ற கற்களால் செய்யப்பட்ட மணிகளும் சிறிய அளவிலான தங்க கம்பியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய அளவுள்ள பொருட்களை நிறுத்தும் ஒரு கிராமிற்கும் கீழ் எடையுள்ள எடைக்கல்லும் கிடைத்துள்ளது. சுடுமண் முத்திரை, அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம் மற்றும் கற்கோடரி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. இவற்றுடன் முழுமையான பானை, கிண்ணங்கள், மெருகேற்றப்பட்ட சிவப்பு வண்ணப் பானைகள், உடைந்த செங்கற்கள், கூரைஓடுகள் ஆகியவையும் வெளி கொணரப்பட்டுள்ளது.
ரசனை மிக்க அழகிய வேலைப்பாடுகளுடன் இருவரி கயிறு வடிவமைப்பு கொண்ட இரட்டை வடத்துடன் அலங்கரிக்கப்பட்ட உறைக்கிணறும் கண்டறியப்பட்டுள்ளன.1.26 மீ. ஆழத்தில் சுடுமண் உறைக்கிணற்றின் மேல்பகுதி தென்பட்டது. அதன் விட்டம் 77 செ. மீ. அதன் பக்கவாட்டில் 44 செ. மீ. உயரம் கொண்டும் தடிமன் 3 செ. மீ. கொண்டும் வெளிப்புறத்தில் கயிறு வடிவ புடைப்பு வேலைப்பாட்டுடன், இருவரிகளில் அமைக்கப்பெற்றுள்ளது.
இந்த சுடுமண் உறைக்கு கீழ் மற்றொரு சுடுமண் உறை உள்ளடங்கிய நிலையில் தோன்றியது. இந்த மேல் சுடுமண் உறையில் வெளிப்புறத்தில் கயிறு போன்ற அலங்கார வடிவமைப்பு இருப்பதால் சுடுமண் உறைக்கிணறாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்ட பொழுது மேலும் இரண்டு உறைகள் வெளிப்பட்டுத்தப்பட்டன. தற்போதைய உயரம் 84 செ.மீ. இவற்றில் இரண்டாம் உறை 19 செ.மீ. மற்றும் மூன்றாம் உறை 18 செ.மீ. உயரம் கொண்டதாக உள்ளன. இந்த உறைகள் ஒன்றோடு ஒன்று இணைத்த நிலையில் உள்ளன. இதனை தொடர்ந்து அகழாய்வு செய்வதன் மூலம் அடுத்த உறைகளை கண்டறியமுடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கீழடியில் மேலும் ஒரு உறைக் கிணறு 411 செ.மீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. உறைக்கிணற்றின் விளிம்புப் பகுதியில் அலங்கரிப்புடன் காணப்படுகிறது. இந்த உறையின் விட்டம் கிழக்கு மேற்காக 58 செ.மீ. கொண்டுள்ளது. இதன் தெற்குப் பகுதி மண்ணடுக்கில் புதைந்துள்ளது. இதன் தடிமன் 3 செ.மீ என கணக்கிடப்படுகிறது. தொடர்ந்து கீழடியில் பணிகள் நடைபெற்று வரும்நிலையில் உறைகிணறின் அளவு முழுமையாக கிடைக்கப்பெறும் என்கின்றனர்.
அதே போல் கொந்தகையில் நடைபெறும் பழமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழிகளுக்கு அருகருகே பானைகள் கிடைத்துள்ளன. இவை இறந்த நபர்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க கிளிக் செய்யவும் - மகாவீரர் சிலை... ராஜராஜ சோழன்... அதே இடத்தில் வர்த்தமானர் சிலை!