கடந்தாண்டு மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த காரைக்கேணி, செங்கமேடு பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிலை, ராஜராஜ சோழன் கல்வெட்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன் அவரின் குழுவினர், தேவட்டி முனியாண்டி கோயில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழைமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழைமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

அதனை தொடர்ந்து இதை கண்டுபிடித்த குழுவினரை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் அதே  தே.கல்லுப்பட்டி  அருகில் கி.பி.10 நூற்றாண்டை சேர்ந்த பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



தே.கல்லுப்பட்டி அடுத்த வேளாம்பூரில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மூத்த தொல்லியல் ஆய்வாளர்   து.முனீஸ்வரன் நம்மிடம்...," வரலாற்றுச் சிறப்பு மிக்க வேளாம்பூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட வர்த்தமானர் எனும் சமன சமயத்தின் 24-வது  தீர்த்தங்கரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும்,  விரிந்த மார்புடனும் காணப்படுகின்றது. தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் உள்ள பீடத்தில் மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் ( பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீது மறுகாலை மடித்து அமர்வது)  அது யோகமுத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 



 

சிற்பம்  சிதைந்த பகுதி :  தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும்  விதமாக ஓளி வீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம்,  நித்த விநோதம்,  சகல பாசானம்,  எனும் முக்குடையும்,  பின்புலத்தில் குங்கிலிய மரமும் , சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும் , இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் போன்றவை உடைந்த நிலையில் காணப்படுகிறது. சமீபத்தில் கவசக்கோட்டை செங்க மேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஓப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இச்சிற்பத்தை கருதாலம் . இப்பகுதியிலும் ஒரு சமண பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை நம்மால் அறிய முடிகிறது  . இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக  அனுமானிக்கலாம்" என்றார்.



மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கீழடியை போல் பாரம்பரியம் பேசும் தொல்லியல் எச்சங்கள் ஆங்காங்கே கிடைக்கபெறுவது. டிஜிட்டல் உலகத்தில் உண்மையின் சான்றாக தலைதூக்கி தமிழரின் பெருமை வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது” என தொல்லியல் ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர்.