சேலம் மாநகர் கிச்சிபாளையம் சேர்ந்த ஜான் என்பவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி ஜான் கடந்த சனிக்கிழமை 55 நாட்களுக்குப் பிறகு ஜாமினில் வெளிவந்தார். இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ஜான் வாய்தாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.
இதனிடையே மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியே வந்தபோது காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஜானை கைது செய்தனர். குறிப்பாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து காரில் வெளியே செல்லும்போது தடுத்து நிறுத்திய காவல்துறையினர் காருக்குள் இருந்த ரவுடி ஜானை கைதுசெய்ய முற்பட்டனர். எந்த வழக்கில் கைது செய்கிறீர்கள் என்று கூறினால் தான் இறங்குவேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் காரில் இருந்த ரவுடி ஜானை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட ஜானின் மனைவி கூறுகையில், "எந்த வழக்கில் கைது செய்கிறார்கள் என்று முறையான தகவல் கொடுக்காமல் காவல்துறையினர் குண்டு காட்டாக கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் முறையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். நாங்கள் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தோம். கடந்த சனிக்கிழமை ஜாமினில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர். குறிப்பாக, அவர் பயன்படுத்திய கார் எனது பெயரில் உள்ளது. எனது பொருட்கள் காரில் உள்ளது. இதை அனைத்தையும் எடுத்துக்கொண்டு காவல்துறையினர் சென்றுவிட்டனர். எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறார் என்று தெரிந்தால் நாங்களே முன் முன்வந்து சரணடைந்திருப்போம். மேலும் எனது கணவரை காவல் துறையினர் தான் அழைத்துச் சென்றார்கள். என் கணவர் உயிருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதன் முழு பொறுப்பை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.