தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 20 தெருநாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 5 தெரு நாய்கள் படுகாயம் அடைந்துள்ளது.  






சுட்டுக்கொல்லப்பட்ட தெரு நாய்கள்:


வியாழக்கிழமை இரவு பொனக்கல் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து அப்பகுதியில் இருந்த தெருநாய்களை குறிவைத்து சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் 20 நாய்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 5 நாய்கள் படுகாயம் அடைந்தது. இதனை தொடர்ந்து வெள்ளிகிழமை காலை இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த தெருநாய்களை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  


குற்றவாளிகளுக்கு வலைவீச்சு?


இதனை தொடர்ந்து காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்த சாட்சி ஒருவர், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் காரில் வந்ததாகவும், அவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  பஞ்சாயத்து அதிகாரியின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 429 (விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது) மற்றும் ஆயுதச் சட்டம் தவிர விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த கொடூர செயல்களை செய்த நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.