வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல மளிகை கடைகள் திறக்கும் நேரமே காலை 9 மணிதான் என்றும், அப்படி 6 மணி அளவில் திறந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்கும், பின்னர் 12 மணிக்கு முன்னதாக உள்ளே எடுத்து வைப்பதற்குமே பாதி நேரம் போய்விடும் என கலக்கத்துடன் பேசும் வியாபாரிகள், விற்பனை நேரத்தை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடைகளில் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்துள்ளனர். எனவே கடைகள் மூடும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே பல்வேறு சிரமங்களை தாங்கள் சந்தித்துவரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது :-



கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நிச்சயம் நீட்டிக்க வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என தெரியவில்லை. இப்படி நேரத்தை மிக குறைந்த அளவில் வைக்கும்போது அவசர அவசரமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பார்கள், இப்படி முண்டியடிக்க நேர்ந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைந்துபோய்விடும்.


இந்த 6 மணிமுதல் 12 மட்டும் கடைகள் திறக்கவேண்டும் என்பது வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்; இதை ஏற்க இயலாது. காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான மக்கள் யாரும் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவதில்லை. அதேபோல் இந்த நேரம் என்பது கடைகளை திறந்து பொருட்களை எடுத்து வைப்பதற்கும், மீண்டும் மூடுவதற்குமே சரியாக போய்விடும். அதேபோல் எந்தெந்த கடைகள் எல்லாம் திறக்கலாம் என்பதை தமிழக அரசு மீண்டும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும். பூ வியாபாரிகள் எல்லாம் கடைகளை திறக்கலாமா ? உரம் போன்ற விவசாய இடுபொருட்களை விற்பவர்கள் கடைகளை திறக்கலாமா என்பதையெல்லாம் சொல்லவேண்டும். விவசாய இடுபொருட்களும், உற்பத்தி பொருட்களும் கிடைக்கவில்லையென்றால் விவசாயமே பாதிக்கப்பட்டுவிடும். இங்கெல்லாம் கூட்டங்கள் கூடாது என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். பொத்தாம்பொதுவாக எல்லா கடைகளையும் மூடியாகவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிடமுடியாது. பொதுவாக ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் எல்லாம் கூட்டம் இருக்காது இப்படியான கடைகளை எல்லாம் திறக்க அனுமதிக்கலாம்.


நடுத்தர வியாபாரிகள் எல்லாம் நாளடைவில் இருப்பார்களா அல்லது இருக்க மாட்டார்களா என்பதே பெரிய கேள்விகுறியாக இப்போது இருக்கிறது. எனவே கடைகளை பிற்பகல் 2 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்ககுறைண்ட்வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.