தஞ்சாவூரில், இந்து மதத்தை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக கருத்துக்களை பரப்பியதாக கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய மூன்று பேரில் வீட்டில் என்ஐஏ, அதிகாரிகள் சோதனை செய்து செல்போன் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர்.கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு, ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




இதனை தொடர்ந்து  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல், தைக்கால்  தெருவை சேர்ந்த  அப்துல் காதர், முகமது யாசின், காவேரி நகரை அகமது ஆகியோரது வீட்டில் தேசிய  புலனாய்வுத் துறை அதிகாரிகள் 12 ஆம் தேதி காலை 5 மணி முதல்,  சோதனை நடத்தினர்.




சோதனையில்,  தஞ்சை மகர்நோப்புச்சாவடி, கீழவாசல், சாந்தஉசேன் தைக்கால் பகுதியை சேர்ந்த சையது காதர் மகன் அப்துல்காதர் (எ) மெக்கானிக் காதர் (49),  பாஸ்ட் புட் கடை வைத்திருக்கும், தஞ்சை, கீழவாசல், சாந்தஉசேன் தைக்கால், பகுதியை சேர்ந்த முகமது யாசின் (30), கோழி இறைச்சி கடை வைத்திருக்கும், தஞ்சை, காவேரி நகர், பகுதியை சேர்ந்த காதர்சுல்த்தான் மகன் அகமது(37) ஆகிய மூன்று பேரின் மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்களை மட்டும் பறிமுதல் செய்த அதிகாரிகள் எடுத்து சென்றனர்.



இந்நிலையில், அப்துல் காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர், வீட்டில் ஆய்வு  செய்தும், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கலவரம் ஏற்படும் சூழல் நிலவியதால், பயிற்சி ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில், இன்ஸ்பெக்டர் கருணாகரன் சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது, டவுன் டவுன் தேசிய புலனாய்வு துறையினர், ஆர்எஸ்எஸ், பாசிசம் என கண்டித்தும், இஸ்லாமிய கடவுகளை  வேண்டி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




சிறிது நேரத்திற்கு வெளியில் வந்த பெண் அதிகாரி உள்பட 4 க்கும் மேற்பட்டோரை, சூழ்ந்து கொண்டு, தேசிய புலனாய்வு துறையினர் ஒழிக என கோஷமிட்டபடி வந்தனர். இதனையறிந்த தேசிய புலனாய்வு துறையினர் வேகமாக வந்து வாகனத்தில் ஏறினர். பின்னர், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், தேசிய புலனாய்வு துறையினர் காரை சூழ்ந்தும், தரையில் அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து தஞ்சை போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




இது குறித்து அப்துல் காதர் கூறுகையில், காலை 5.30 மணியளவில், தேசிய புலனாய்வு துறையினர், வீட்டிற்கு வந்து, ஆய்வு செய்ய வேண்டும் என்றார்கள். நான் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்றேன். வழக்கறிஞரிடத்தில் பேச முடியாது, நாங்கள் ஆய்வு செய்த பிறகு தான் வாய்ப்பு கொடுப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது என்னிடம் உள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். எதுவுமே கைப்பற்ற வில்லை. என்னுடைய செல்போன், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். என்னிடம் உள்ள சிவில் கேஸ் தொடர்பான ஆவணங்களையும் எடுத்து சென்றுள்ளனர். பின்னர் கையெழுத்து கேட்டனர்.ஆனால் என்னுடைய வழக்கறிஞரை கேட்காமல் கையெழுத்திட மாட்டேன் என்றேன்.




கையெழுத்து போடுகீறீர்களா இல்லையா, போட முடியுமா முடியாதா  என்னை மிரட்டினார்கள். கையெழுத்து போடாவிட்டால், இதன் பிறகு நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்.  தமிழக காவல் துறை, ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானதாகும். அவர்களிடம் சொல்லியிருந்தால், அவர்களே விசாரித்திருப்பார்கள். மத்திய அரசின் தேசிய புலனாய்வு துறை, என்னை விசாரணை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்று செய்கிறார்களா என்று தெரியவில்லை.




நீட் மசோதாவை திரும்ப பெறச்சொல்லி, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவர்னர் ஆர்என். ரவி, நீட் மசோதா பிரச்சனையை திசை திருப்புவதற்காக தமிழ் நாட்டில் தேசிய புலனாய்வு துறையினரை வைத்து இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என உருவாக்குகின்றார். நான் 15 ஆண்டுகளாக சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன். பேரிட்சை பழம் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து வருகின்றேன்.  தஞ்சையிலுள்ள உளவுத்துறையினருக்கும் என்னை பற்றி தெரியும் என்றார்.