Kallakurichi - National Human Rights Commission India: கள்ளக்குறிச்சியில், கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்தியதில்,தற்போதுவரை 60 பேர் உயிரிழந்த நிலையில், இவ்விவகாரத்தை , தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோரில் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவமானது, தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை:
இந்நிலையில், இந்த வழக்கை , தேசிய மனித உரிமைகள் ஆணையமானது, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 47க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பெண்கள் உட்பட ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- இவ்விவகாரம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரி ஆகியோர் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும், அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நிவாரண நிதி அளிக்கப்பட்டது குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையில் இறங்கியுள்ள சம்பவம், கள்ளக்குறிச்சி விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.