இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் அதிகப்படியான மக்கள் வராததன் காரணமாக மெட்ரோ ரயில் தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பயணச்சீட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டது. பின்னர் பயண அட்டை வைத்து மாதந்தோறும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குறிப்பிட்ட அளவு சலுகை வழங்கப்பட்டது. இதனால் மெல்ல மெல்ல மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் மேற்கொள்வது அதிகரித்தது.
கடந்த மாதம் மெட்ரோ ரயிலில் சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டனர் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கப்பட்டு அதிக மக்கள் பயணம் மேற்கொள்வது இதுவே ஆகும். இது போன்ற சூழலில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்பவர்களுக்கு இனி கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் 6 மணி நேரத்திற்கு 10 ரூபாயும் 12 மணி நேரம் வரை 15 ரூபாயும் கட்டணமாக வசூளிக்கப்பட்டது. ஆனால் நாளை முதல் இந்த கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. நாளை முதல் 6 மணி நேரம் வரை ரூபாய் 20-ம், 12 மணி நேரம் வரை ரூபாய் 30-ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க மெட்ரோ பயணிகளுக்கு நாளை முதல் வாகனம் நிறுத்த கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி வெளியீட்டில், “சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 14.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ இரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் (https:/chennaimetrorail.org/parking-tariff), உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் மூலம் அல்லது மெட்ரோ இரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Banners) மற்றும் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பணியாளர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு சலுகை, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளாமல் மின்சார ரயிலில் அல்லது வாகனம் மட்டும் நிறுத்திக்கொள்பவர்களுக்கு கட்டண உயர்வு என பாரபட்சமாக மெட்ரோ ரயில் நிறுவனம் நடந்துக்கொள்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.