2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்த போது, செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கன்னங்களை தட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறியது. அப்போது நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி சேகர் பெண்கள் குறித்து மிகவும் மோசமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.


இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைப்புகள் தரப்பில் எஸ்.வி. சேகர் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்பட்டது. எஸ். வி சேகர் மீது புகார் எழுந்த நிலையில், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தது. பின் விசாரணை மேற்கொண்டனர்.  இதனை தொடர்ந்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதேபோல் கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியிருந்ததாக வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, தவறான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பு கோரிவிட்டால், தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா என எழுப்பி, மனுக்கள் மீதான தீர்ப்பை  தள்ளிவைத்தார்.


இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது. பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார் என ஆனந்த் வெங்கடேஷ் வாதிட்டார். அதற்கு அவர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு விசாரணை நீதிமன்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், சேகருக்கு எதிரான வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.