சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் சேலம் மாநகர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஹோட்டல் நியூ தமிழ்நாட்டை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். 15 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்ததையடுத்து ஒருமாத காலமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


இதனைதொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். ”தமிழக முதலமைச்சர் அனைத்து துறைகளையும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்து, அதன் நடவடிக்கை குறித்து கேட்டறிந்து வருகிறார். ஒவ்வொரு துறையும் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது. அதில் மேல்நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் சுற்றுலாத்துறை சார்பில் பலபகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருவதாக கூறினார். சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் ஹோட்டல்கள், தங்குமிடங்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்கால சூழலுக்கேற்ப ஹோட்டல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கழிப்பிடவசதி, தங்குமிடம், வாகனம் நிறுத்துமிடம், உணவகம் ஆகியவற்றை தரமாக செய்து தர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். 



”சென்னை முட்டுக்காடு பகுதியில் மிதவை படகு உணவகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த பணி இன்னும் இரண்டு மாத காலத்தில் முடியுள்ளது. கீழ்த்தளத்தில் 100 பேரும் அமரும் வகையில், குளிரூட்டப்பட்ட அரங்கம், மேல்தளத்தில் பார் வசதியுடன் 100 பேர் அமரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைபோல் ஏற்காடு, உதகை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் மிதவை உணவகங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார்.


“கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் சட்டங்களை இயற்றி இருந்தனர். பட்டா கிடைக்காத நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 15000 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டுள்ளனர். கடுமையான இந்த சட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை எளிமையாக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக பேசினார். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் நீலகிரி மாவட்டத்தை நேரில் பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 21அடி உயரத்திற்கு மேல் கட்டக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் பலகட்டிடங்கள் முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், நீலகிரியில் 100 சர்வேயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். எங்கு, எந்த கட்டிடத்திற்கு அனுமதி தரலாம்,தேவையில்லாத கட்டிடங்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்” என்றார். 



தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கடந்த ஆண்டு 90 லட்சம் பேர் வருகை தந்திருந்தனர், இந்த ஆண்டு கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இதனால் ஏற்காட்டினை மேலும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் சுற்றுலாத் துறைக்கு மட்டும் மாஸ்டர் பிளான் போடவில்லை அனைத்து துறைகளிலும் நிபுணர்களை வைத்து, தமிழகம் முழுவதும் எந்தெந்த துறையை வேகமாக வளர்ப்பதற்கு எந்த பணிகளை மேற்கொள்ளலாம் என ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்துள்ளார். தமிழக முதல்வர் போட்ட மாஸ்டர் பிளானில் சுற்றுலாத்துறைக்கு 300 இடங்கள் மேம்படுத்துவதற்காக தேர்வு செய்து கொடுத்துள்ளனர். அதனை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.