சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறைச்சாலை சார்பாக கைதிகளின் திறமையை மேம்படுத்தவும், மனமாற்றத்தை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சிறைசாரல்:
இதன் ஒருபகுதியாக சேலம் மத்திய சிறையில் சிறைசாரல் என்ற இன்னிசை குழு செயல்பட்டு வருகிறது. இதில் சிறைவாசிகளே இசையமைத்து, பாடல் வரிகளை எழுதி பாடுகிறார்கள். சிறைவாசிகளை மனமாற்றம் ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மறுவாழ்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காகவும் இந்தக் இசைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு விழாக்களான காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறைசாரல் குழுவினர், நிகழ்ச்சிகள் நடத்தி அனைத்து கைதிகளையும் மகிழ்ச்சியடைய செய்கின்றனர்.
மேலும் தமிழக சிறைச்சாலைகள் மட்டுமில்லாமல் வெளிமாநில சிறைச்சாலைகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்பதற்காகவும் இந்த குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கைதிகள் இசையமைத்து பாடல்களை பாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் எம்மதமும் சம்மதம் என்ற தலைப்பில் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த புதுவிதமான முயற்சி, சிறை கைதிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரிசன் பஜார்:
இதேபோன்று கடந்த மாதம் சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதிகளை வைத்து "பிரிசன் பஜார்" என்ற பெயரில் பிஸ்கெட், பிரட், பன், காரச் சேவ், மிக்ஸர், முறுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக சிறையில் தயாரிக்கப்படும் பிரட் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளை கொண்டு பிரிசன் பஜாரில் புதிதாக பால், டீ, காபி, பப்ஸ், முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ், உளுந்த வடை, மசால் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டை போண்டா, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிஸ்கட் வகைகள், லட்டு, பாதுஷா, சமோசா, மைசூர் பாகு, இட்லி, ஊத்தாப்பம், பூரி, பொங்கல், ஆனியன் தோசை, மசால் தோசை, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டு கைதிகள் விற்பனை செய்து வருகிறது.
இங்கு சிறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கடைகளில் விற்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. விற்பனையாகும் பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் லாபத்தில், அந்தப் பொருட்களை தயாரித்த சிறை கைதிகளுக்கு பகிர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிசன் பஜாரில் விற்கப்படும் பொருட்களை சிறை கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வரும் நாட்களில் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூ, சட்டை, பேண்ட், பெட்ஷீட், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணைய், புடவைகள் போன்றவையும் விற்பனைக்கு கொண்டு வர சேலம் மத்திய சிறை திட்டமிட்டுள்ளது.