மதுரையில் மூன்றாவதாக திருமணம் செய்த பெண்ணை கொன்று எரித்த கணவரும் அவரது குடும்பத்தாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி பொட்டப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் கடந்த 29ம் தேதி இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில் கொலை செய்து எரிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் குட்டுபட்டி அருகே பஞ்சயம்பட்டியை சேர்த்த ராசாத்தி (19) என தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கணவர் அர்ச்சுணன் (25), மாமனார் ராசு (50), மாமியார் அரியம்மாள் (48), உறவினர்கள் வல்லான் என்ற ரவி (42), சிவலிங்கம் (39) ஆகியோர் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.
மூன்றாவது திருமணம்
அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நத்தம் பஞ்சயம் பட்டியை சேர்ந்த அர்ச்சுணன் முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 10 நாட்களில் பிரிந்து விட்டார். இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி, அவரையும் அவர் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் மூன்றாவதாக ராசாத்தியை காதலித்து வந்த அர்ச்சுணன் அவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ, ராசாத்தியை அர்ச்சுணன் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு ராசாத்தி மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் தான் வேலை பார்த்த இடத்திற்கே அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு ராசாத்தி வேறு சில ஆண்களுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கிராமத்திற்குச் செல்லலாம் என கடந்த ஜூன் 28 ல் மனைவியை ஊருக்கு அழைத்து வந்துள்ளார் அர்ச்சுணன்.
கொன்று எரித்த குடும்பம்
கொட்டாம் பட்டி பள்ளப்பட்டி அருகே இரவில் பஸ்ஸை விட்டு இறங்கிய போது, அர்ச்சுணனின் பெற்றோர் அங்கு காத்திருந்தனர். பஸ்ஸை விட்டு இறங்கியதுமே குழந்தையை அவரது தாய் அரியம்மாள் வாங்கி கொண்டார். தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றபோது, திடீரென அர்ச்சுணன் மற்றும் மாமனார் ராசாத்தியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை தீ வைத்து எரித்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்த போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த ராசாத்தியின் புகைப்படங்களை வெளியிட்டு அடையாளம் தெரிந்தவர்கள் கூறலாம் என கூறியிருந்தனர். இதனையடுத்து ராசாத்தியின் பெற்றோர் அவர் அணிந்திருந்த தாலியை வைத்து அடையாளம் கூற, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கொட்டாம் பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.