உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
புலன் விசாரணை முடிந்த பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல

தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் இல்லையேல் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
புலன் விசாரணை முடிந்த பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும் நேரில் ஆஜராவதில் இருந்து உள்துறை செயலாளருக்கு விலக்கு அளிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் கறாராக தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவல்துறை செயல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இன்று உள்துறை செயலாளர் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு கோரி நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆஜராவதில் இருந்து உள்துறை செயலாளருக்கு விலக்கு அளிக்க முடியாது எனவும் இன்று மாலை 4.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஜராவதில் இருந்து தடை உத்தரவை உச்சநீதிமன்றத்தில் பெற வேண்டும் எனவும் அப்போது வாரண்டை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த காரணத்தை நீதிமன்றத்தில் சொல்லலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.