14, 18, 22 காரட் தங்க விற்பனைக்கு மட்டுமே அனுமதி என மத்திய அரசு புதிய விதியை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணயம் அமைப்பு (பிஐஎஸ்) சட்டம் 2017ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. நகைகள் மற்றும் கலை பொருட்களுக்கான, 'ஹால் மார்க்' உத்தரவின்படி, அங்கீகாரம் பெற்ற கடைகளில், 14, 18, 22 காரட் தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய முடியும் என புதிய சட்டத்திருத்தம் சொல்கிறது.


ஆனால், இது வணிக நடைமுறைகளுக்கு எதிரானது என நகைக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக, சென்னை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


மனுவின் விவரம்:


சென்னை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "மத்திய அரசின் இந்த உத்தரவு தன்னிச்சையானது. நாங்கள், ஹால்மார்க் குறியீட்டு நகை விற்பனைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், 14, 18, 22 காரட் மட்டுமல்லாது 15, 16, 17, 19, 20, 21, 24  என எந்த வகை காரட்டிலும் ஆபரண நகைகளைத் தயாரிக்க, எங்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட சில காரட் தங்க விற்பனைக்கு மட்டும் தடை விதிப்பது, வணிக உரிமையை மீறுவதாக உள்ளது. வணிகர்களை பெரும் சங்கடத்துக்கு ஆளாக்கும் செயல்.


ஏற்கெனவே, சந்தையில் 20, 21 காரட் தங்க நகைகளுக்குதான் அதிக தேவை உள்ளது. தென் தமிழகத்தில், 20 மற்றும், 21 காரட் தங்கத்தில் தான் திருமணத்திற்கான திருமாங்கல்யம் தயாரிக்கப்படுகிறது. புதிய உத்தரவால், தற்போது அந்த நடைமுறையையே நிறுத்த வேண்டியதுள்ளது.


இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லை. சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளில்கூட இத்தகைய தடை உத்தரவு இல்லை.எனவே, தங்க நகை மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கான ஹால் மார்க் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி வாதாடினார். இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு, இவ்விவகாரத்தில் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.  மேற்படி விசாரணையை வரும், 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.