தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபுணத்துவம் உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம் கிரிஜா நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு சென்றது. அப்போது, கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து அமர்வு உத்தரவிட்டது. மேலும் அது தொடர்பாக கருத்து தெரிவித்த அமர்வு, ‛நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதியில்லை என கூற முடியாது என்றும், எனவே கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த பூவுலகின் நண்பர்கள்  வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக,’  அமர்வு உத்தரவு பிறப்பித்தது. 




முன்னதாக கிரிஜா தரப்பில், ‛ தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், நிர்வாகத் துறை செயலாளர் பதவிகளை வகித்த போது சுற்றுச்சூழல் விவகாரங்களை கிரிஜா  கவனித்து உள்ளதாக,’ அவரது வழக்கறிஞர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. தீர்ப்பாய நியமன விதிகளின்படியே கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தகுதியை பூர்த்தி செய்யாத விண்ணப்பத்தாரர் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதமும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, ‛நிபுணத்துவ உறுப்பினரின் நிபுணத்துவம் என்பது நீர்த்துப்போகக் கூடாது,’ என்ற கருத்தை தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் மனுவை தள்ளுபடி செய்தார்.