தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோடை விடுமுறை முடிந்து முதலில் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கடுமையான வெப்பநிலை இருந்ததன் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வெளியான அறிவிப்பின் படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவித்தார். அதன்படி, அரசு, அரசு உதவிப்பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 


இதையடுத்து வகுப்பறைகள் சுத்தப்படுத்துவது, கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  அதேபோல் 2024 -25 ஆம் கல்வியாண்டில் 220 வேலை நாட்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறக்கப்பட்ட உடனேயே பாடப் புத்தகங்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.


பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரையில் பழைய அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.






பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.