எஸ்பிஐ வங்கிப்படிவங்களில் இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக டிவிட்டரில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) செயல்பட்டுவருகிறது. இவ்வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதோடு அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. சமீபத்தில் கூட, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ பல்ஸ் டெபிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இன்சுரன்ஸ் பெறுவது முதல் மருத்துவத்தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியது.
இப்படி பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்துக்கொடுத்தாலும், அதன் விபரங்கள் அனைத்தும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருந்தால் அவர்கள் எளிதில் புரிந்து பயன்பெற முடியும். ஆனால் எஸ்பிஐ வங்கிப்படிவத்திலேயே இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தது வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குறித்து டிவிட்டர் வாயிலாக புகார் தெரிவித்துள்ளார்.
சுசித்ரா விஜயன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ என்னுடைய அம்மா எஸ்பிஐ வங்கியின் மெட்ராஸ் கிளைக்குச் சென்ற போது அங்குள்ள வங்கிப்படிவங்கள் இந்தியில் இடம் பெற்றுள்ளது. அப்போது அவர் இதில் நான் என்ன எழுதவேண்டும் என்று கேட்கிறார்?. என்ன எழுதியுள்ளது என்று தெரியாதப்போது எங்களால் எப்படி இந்த விண்ணப்படிவத்தை நிரப்ப முடியும்? இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறினால் தன்னுடைய எஸ்பிஐ வங்கிக்கணக்கை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என அம்மா கூறிவிட்டதாகக் கோபத்துடன் தெரிவித்திருந்தார்.
இவருடைய டிவிட்டர் பதிவிற்குப் பதிலளித்த மற்றொரு பெண்ணியவாதி ஒருவர், இச்செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில காலங்களாக வங்கிப்படிவங்களில் இதுப்போன்ற செயல்கள் நடைபெறுகிறது எனவும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இதனைப்பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளதோடு, எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும் இதனால் எந்தவிதப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புகாருக்குப் பதிலளித்த எஸ்பிஐ வங்கி, தயது செய்து கணக்கு வைத்திருப்பவரின் தொடர்பு விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிளையின் பெயர் மற்றும் குறியீட்டை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் என்ன பிரச்சனையை சரிசெய்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி எனவும், எங்களின் பிராந்தியக்குழு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று டிவிட்டர் வாயிலாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.