2015 முதல் 2018 ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்..டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இல்லம், சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.



Dvac Raid : லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு : எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் 316 ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல்


கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, .கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர். அதிமுக தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த காவல் துறையினர், அங்கு திரண்டிருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அப்போது அதிமுக தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் காவல துறையினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகேயுள்ள வீடுகளுக்குள் சென்றும் தேடியும் காவல் துறையினர் அதிமுகவினரை கைது செய்தனர்.




9 மணி நேரம் நடைபெற்ற இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை இன்று மாலை நிறைவடைந்தது. இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மூன்றாவது முறையாக இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது. இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. 7500 ரூபாய் பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றவில்லை.




மின்சார கட்டண உயர்வை திசை திருப்ப சோதனை நடைபெற்றது. இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தோம். எல்இடி திட்டம் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கை திமுக போடுகிறது. எல்லா ஒப்பந்தமும் சட்டப்படி நடந்துள்ளது. ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாதுஎனத் தெரிவித்தார்.


இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக கோவையில் 14 இடங்கள், சென்னையில் 9 இடங்கள், திருச்சியில் 2 இடங்கள், திருவள்ளுர், செங்கல்பட்டில் தலா 3 இடங்கள் என 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.




இச்சோதனையில் 32.97 இலட்ச ரூபாய் பணம், 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி ஆபரணங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்று, 2 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.