Election Commission Of India: இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


ஓபிஎஸ்க்கு பின்னடைவு:


முன்னாள் முதலமைச்சர்  மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதன் காரணமாக கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி தரப்பிற்கு சென்றது. இப்படியான சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.


ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமே வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார். மேலும், இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம்  இரட்டை இலை அல்லது தனி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார். இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.


 அந்த மனுவில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எங்களின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் திறம்பட பங்கேற்கும் வகையில், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம்:


நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். 


இதனை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தில்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீல்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரட்டை  இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.  இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




மேலும் படிக்க


PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு