மயிலாடுதுறையில் கணவன் இறந்து 24 ஆண்டுகள் ஆன நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடினாலும், மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கிய மீன் மார்க்கெட்டில் மீன்களை கழுவி சுத்தம் செய்து வரும் பெண்மணியின் சாதனை கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருபத்தி  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கறியை விட்டுக்கொடுத்து கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி, அதை துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும். 




இதற்காக இருந்து ஆண்களுக்கு முன்பு 2,3 ரூபாய் வரை கூலியாக பெற்ற இவர் தற்போது இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். காலச்சக்கரம் சுழன்ற நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் பத்தாவதுக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். 




இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு மாதத்தில் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜெயலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகாரம் தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக தீவிர  பயின்று வருகிறார். இதனால், இன்றும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார். 




கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு எங்கெங்கோ பறந்து திரிந்து உணவை எடுத்து வந்து ஊட்டி வளர்க்கும் தாய்ப் பறவை போல, சொத்துக்களை இழந்தாலும், தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல்வத்தை முழுமையாக கொடுத்த திருப்தி தாய் ரமணியின் கண்களில் தெரிகிறது. ரத்த நாள சுரப்பி நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அரசு சார்பில் மருத்துவ உதவி வழங்கினால் அதுவே தனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கண்களில் ஈரம் கசிய ரமணி தெரிவிக்கின்றார்.




இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் இறந்ததால் இளமைப் பருவத்தில் பல போராட்டங்களை கடந்து தன் மகளை மருத்துவ படிப்புக்காக மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி சுத்தம் செய்து தரும் கூலித்தொழில் இன்றளவும் செய்து வருகிறார். அவர் பல கட்டப் போராட்டங்களை சந்திக்கும் நிலையில்,  குடும்பத்திற்கு ஆதரவாக தனது வீட்டில் மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அவர்கள்தான் அவர் குடும்பத்திற்கும் மானத்திற்கும் பாதுகாவலன் என்று சொல்லி அந்த நாய்களை தெய்வமாக மதித்து தினமும் காலை வேலைக்கு செல்லும்போது தனது நாய்களை தொட்டு வணங்கிய பின்பு வேலைக்கு செல்கிறார். அவரது குடும்பத்தில் இந்த மூன்று நாய்களும் ஒரு அங்கம் என்று தாய் இரமணி தெரிவித்தார்.




அவர் கடவுளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எனது இரண்டு கைகளை மட்டும் விட்டுவிடு, கைகள் இருந்தால் இன்னும் நாள் முழுக்க பல கஷ்டங்கள் பட்டாலும் மீன்களை வெட்டி சுத்தம் செய்து எனது பிள்ளைகளை காப்பாற்றி என் மகளை மருத்துவராக ஒரு இடத்தில் அமர வைத்து தீருவேன் என்று சபதம் எடுத்ததுடன் வீரத்தாய் தனது மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றார்.