தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்" கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், " இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது அரசின் முக்கிய திட்டங்கள் வருகின்றன எந்த அளவுக்கு களத்தில் மக்களை சென்றடைந்து வருகின்றன என்பதையும் இன்னும் அந்தத் திட்டங்களை எப்படி சிறப்பாக நடைமுறைபடுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் எல்லாம் குறித்து இங்கே நாம் விவாதித்திருக்கிறோம். மக்களை நேரடியாக சந்தித்து அரசு திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு  அலுவலர்களாகிய நீங்கள் அளித்து வரும் சிறப்பான செயல்பாட்டினால், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் வகுத்துத் தரும் திட்டங்கள் சீரிய வகையிலும் பொதுமக்கள் போற்றும் வகையிலும் அவர்களை சென்றடைந்து  வருகின்றன. குறிப்பாக கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட “மகளிர்  உரிமைத் தொகைத் திட்டம்" அறிவிக்கப்பட்ட  குறுகிய காலத்திற்குள்  உங்கள் அனைவரின் பங்களிப்பால் திறம்பட செயலாக்கப்பட்டு, சில  தினங்களுக்கு முன் இரண்டாவது  தவணைத் தொகையையும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இது மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக "புதுமைப் பெண் திட்டம்”"மக்களைத் தேடி மருத்துவம்" "முதல்வரின் முகவரி”“நான் முதல்வன்” இது போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் உங்களது சிறப்பான பணியினால் மக்களை சென்றடைந்துள்ளது. அதற்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.


இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது நாம் முக்கியமான திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். குறிப்பாக. மாநகராட்சி சாலைப் பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளைக் குறித்தும் நாம் ஆய்வு செய்தோம். இவ்வகை திட்டப்பணிகள் குறிப்பாக சாலைப் பாலங்கள், சமூகநலத் திட்டங்கள் பணிகள், குடிநீர் திட்டங்கள், ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றித் தருவது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.


பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவதை காண முடிந்தாலும், ஒருசில பணிகளில் தொய்வு இருந்ததையும் நாம் கவனித்தோம். அதற்கான விளக்கத்தையும், அது குறித்து  என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், துறைத் தலைவர்களும் தெரிவித்தார்கள். அதன்படி நீங்கள் அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கக்  கேட்டுக்கொள்கிறேன். திட்டங்களில் காலதாமதம் ஏற்படுவதனால்  ஏற்படும் விளைவுகளைப் பற்றி  நான் முந்தைய ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது என்னவென்றால், அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும்  நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன அவை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை அந்தத் திட்டத்தைத் துவக்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம்.


இந்த நல்ல தருணத்தில் நாள் இரண்டு முக்கிய இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்;



  •  முதலாவதாக, சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று. இந்த அரசு பதவி ஏற்றவுடன், இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலையில் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும்  பயனடைந்தனர். தற்போது  இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது  என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை முதல் நாவலூர் கட்டண  சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில்  வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.