சென்னையில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 


முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து சிறப்புரையாற்றினார்.




அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ கலைஞரை வாழ்த்துவதற்காக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். திராவிட இயக்கததை சார்ந்தவர்களாக இருந்தாலும், காந்தியடிகளுக்கும் எங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் நன்கு அறிவார். உலக பெரியார் காந்தி என்ற பெயரில் ஒரு புத்தக்கத்தை பேரறிஞர் அண்ணா எழுதினார். நாங்கள் எப்படி காந்தியடிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோமோ, அதே போல் தான் திராவிட இயக்கம் மீது கோபாலகிருஷ்ண காந்தி மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார். அண்ணா, கலைஞரின் அரசியல் ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு ஆதரவான, மதவாதத்திற்கு எதிரான அரசியல் என எழுதியுள்ளார்.  சிறைச்சாலைகளில் கனரக இயந்திரங்கள் வழங்கிய போது அவர் மனதிறந்து பாராட்டினார். கோபாலகிருஷ்ண காந்தி இந்நிகழ்ச்சிக்கு வந்து கலைஞரை பாராட்டி பேசியது என் வாழ்நாளில் கிடைத்திருக்கும் மாபெரும் பேறு. இந்த பெயரை காப்பாற்றும் அளவிற்கு நான் நடந்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டு பேசினார்.


தொடர்ந்து கலைஞர் பற்றி பேசிய முதலமைச்சர், ”நாளை முத்தமிழ் அறிஞர் தோன்றிய நாள். தமிழ் சமுதாயத்திற்கு உயிராக உணர்வாக இருந்தவர் தோன்றிய நாள். தமிழ்நாடு அரசு நுற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.  இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது கலைஞர் தான். அவர் தொடாத துறையும் இல்லை, தொட்டுத் துளங்காத துறையும் இல்லை என்ற வகையில் அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் போட்டுக்கொடுத்த பாதையில் தான் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகிறது. அவர் மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி  செய்கிறார். இந்த நூற்றாண்டு விழாவிற்கான இலச்சிணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் மதுரையிலும், சென்னையில் பன்னோக்கு மருத்துவமனையும் அமைய உள்ளது. மாதந்தோறும் சாதனை விளக்க விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 50 ஆண்டுகாள வளர்ச்சிக்கும் மேண்மைக்கும் அடித்தளமாக இருந்தவர் கலைஞர். சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் இருக்க காரணம் கலைஞர் தான்” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.  


மேலும், “சிங்கப்பூர் ஜப்பானுக்கு சென்று சுமார் ரூ. 3233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். இரு நாடுகளும் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் தான் தொடங்குவோம் என தெரிவித்துள்ளனர். அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படும், விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அந்த குழுக்கள் கலைஞரின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். உலக தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் சென்னையில் அமைக்கப்படும். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.