நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தலை சந்தித்துள்ளது. நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் எப்போதுமே தணித்தே போட்டியிட்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் கொள்ளை, கொலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுதொடர்பான தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவது வழக்கம். மேலும், கட்சி சார்ந்த அறிவிப்புகள், அறிக்கைகள் உள்ளிட்டவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.
இது போன்ற சூழலில், சீமான் உள்பட 20 க்கும் அதிகமானோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று திடீரென ஒரே நேரத்தில் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சீமானின் ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்யராஜ்.சே, சுனந்தா, விக்கி பார்கவ் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை முடக்கத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் துறை விளக்கம்:
திடீரென ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அதற்கும் பெருநகர சென்னை காவல் துறையினருக்கும் எந்த சம்மதமும் இல்லை என தெளிவுப்படுதியுள்ளது. இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.