சீமான்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தலை சந்தித்துள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி அனைத்து  தேர்தலிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். மேலும், சீமான் பல்வேறு கட்சிக் கூட்டங்களையும், நிகழ்வையும் நடத்தி வருகிறார்.


தமிழகத்தில் நடைபெறும் கொள்ளை, கொலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுதொடர்பான தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும், கட்சி சார்ந்த அறிவிப்புகள், அறிக்கைகள் உள்ளிட்டவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். 


சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்


இந்நிலையில், சீமான் உள்பட 20 பேருக்கு மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று திடீரென ஒரே நேரத்தில் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முடக்கப்பட்ட சீமானின் ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 


மேலும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்யராஜ்.சே, சுனந்தா, விக்கி பார்கவ் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை முடக்கத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. 


முதல்வர் கண்டனம்


இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவத்துள்ளார்.






இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர்  திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.  கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்