தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போட்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது.


இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது.  இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதன்படி, மே-2ம் தேதி ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26  ஆம் தேதி உத்தரவிட்டார். இதற்கிடையில் போலீசாரிடம் இருந்த ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாம்பரம் போலீசார் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.