கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் திமுகவை சேர்ந்த 15 நபர்களுக்கு 3வது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 




 


கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது,
அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, கார் கண்ணாடி உடைத்து தாக்குதல் நடத்திய வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட  திமுக - வை சேர்ந்த  15 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட நிலையில், கரூர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.


 




 


வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்து தங்களை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக முறையிட்டனர். மதுரை உயர்நீதிமன்றம் 15 நபர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்து, வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நிலையில், ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.  


 




 


திமுகவினர் 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுகவை சேர்ந்த 15 நபர்கள் மீண்டும் 3-வது முறையாக கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர்.  கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் உட்பட திமுகவினர் 15 பேருக்கும் செப்டம்பர் 11ஆம் தேதி வரை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.