பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது. இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு, டிசம்பர் 22ம் தேதி அறிவித்தது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு அதிகப்பட்சம் ரூ.2,500 வரை பணம் கொடுக்கப்பட்டு, கரும்பு,பச்சரிசி உட்பட பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்தாண்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் இந்தாண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளதாகவும், அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24-ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.