கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்தது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இது தொடர்பாக கூறிகையில், பாலத்தின் தவறான வடிவமைப்பே காரணம் என தெரிவித்துள்ளார்.  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நிதிஷ்  குமார், குற்றவாளிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2022ஆம் ஆண்டும் இதே பாலம் இடிந்து விழுந்தது என்றும் கூறினார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பர்வட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்தது. 






“நேற்று இடிந்து விழுந்த பாலம் கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டமைக்கப்படாததால் தான் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என பீகார் முதலமைச்சர் நிதிஷ்  குமார் கூறியுள்ளார்.  சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதற்கு காரணமானவர்களை அடையாளம் காணுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த 2014 ஆம்  ஆண்டு இந்த பாலத்தை மக்கள் பயண்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  






அகுவானிகாட்டையும் சுல்தாங்கஞ்சையும் இணைக்கும் பாகல்பூர் பாலம் நேற்று இடிந்து விழுந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,  அதன் வடிவமைப்பில் கடுமையான குறைபாடுகளை நிபுணர்கள் கண்டறிந்ததால், இது திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சாலை கட்டுமானத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிரத்ய அம்ரித், 2022 இல் கடும் மழையின் போது அதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். கட்டமைப்பை பகுப்பாய்வு செய்ய ஐஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.