திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அந்த அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அணுக்கழிவாக மாறுகிறது. அந்த அணுக்கழிவுகள், அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் சேமிக்கப்படும் அணுக்கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும் என்பதால் அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவானது உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும். இந்தச் செயல்முறைக்கு Away From Reactor என்று பெயர்.

 


 

இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்க முடியாது. இது தற்காலிகமான ஓர் அணுக்கழிவு மையம். ஆனால், அணுக்கழிவை Deep Geological Repository எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் முறையானது. ஏனெனில் நிரந்தரமாகச் சேமித்து வைக்க பூமிக்கடியில் பல கிலோ மீட்டர் ஆழத்தில் சேமிக்க வேண்டும். அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவை; அதுவரை அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்கப்படாமல் இருப்பது மிக அவசியம், எனவே தற்காலிகமாக சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது என்பதால் பேரிடர் காலத்தில் பெரும் விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.  

   


கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து அணுஉலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை (away from reactor) 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான். நீதிமன்றம் அளித்த கால அவகாசம் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடியவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்திக் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் இந்த அணுக்கழிவு மையம் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக உள்ளதால் இதற்கு மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அதற்கு 2022ஆம் ஆண்டு வரை கால அவகாசமும் கேட்டிருந்தது.

 



 

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை அமைக்க இருப்பது பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுந்தர்ராஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது

 

அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் `ஆழ்நிலை கருவூலம்' (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விஷயமாகும். உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடும் கண்டுபிடிக்க முடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாகத் தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

 

நிரந்தரக் கழிவுமையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தவேண்டும். மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக கூறும் சுந்தராஜன், அணுஉலை கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிலையில், மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியைக் கைவிட வைப்பதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தவேண்டும் என்றார்.