அதிமுக தலைமைக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது. தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகும் நிர்வாகிகளை கூட்டணி கட்சியான அதிமுக தன் கட்சியில் சேர்ந்து கொண்டது அந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்தார்.


அண்ணாமலை பேச்சு: 


இப்படியான சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து அதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுதியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


சி.வி சண்முகம் கண்டனம்:


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்பவர்களிடம்  பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்குபவர் தான் இந்த அண்ணாமலை. அப்படிப்பட்ட அண்ணாமலை எங்களின் ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேச தகுதியற்றவர் என கூறினார். 


செல்லூர் ராஜூ கண்டனம்:


மனித புனிதர் ஜெயலலிதா குறித்து பேசிய அண்ணாமலைக்கு தகுந்த பதிலை ஜெயகுமார் அளித்துள்ளார். தமிழக பாஜக கட்டுப்பாடு இல்லாத இயக்கம், மாநில தலைமை பொறுத்தவரை ஒரு பொம்மை மட்டுமே, அந்த பொம்மையை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து வைக்கலாம். தமிழக பாஜக தலைவர் என்பவர் நிரந்திர தலைவர் இல்லை ,பொம்மை போன்று தான்,ராஜாவாகவும் வைக்கலாம் பொம்மையாகவும் வைக்கலாம். ஆண்டவனே தடுத்தாலும் ஜெயலலிதாவை பழித்தவர்களை நாங்கள் விட மாட்டோம் என கூறியுள்ளார்.


ஜெயகுமார் கண்டனம்:


சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  அண்ணாமலையின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மாநிலத் தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக சாடினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும், இவரது இந்த போக்கு தொடர்ந்தால், பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார். 


மேலும் பாஜக கூட்டணி தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிப்போம் என துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டுமென 2014 தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். பாஜக கூட்டணியில் தொடர்வது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என  அதிமுக மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.


ஓபிஎஸ் கண்டனம்:


”அண்ணாமலையின் இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா. இதய தெய்வம் அம்மா எவ்வித அரசியல் பின்புலமின்றி, தன்னுடைய தனித் திறமையால், மதி நுட்பத்தால், சாணக்யத்தனத்தால், ராஜதந்திரத்தால், சோதனைகளை சாதனைகளாக்கி, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தலைமையேற்று நடத்திய பெருமைக்குரியவர் அம்மா.  அம்மாவின்  ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


அமமுகவின் டிடிவி தினகரன் கண்டனம்:


” அரசியல் அறிவு ஏதுமின்றி ஜெயலலிதா பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் காட்டுகிறது. உலகம் வியந்த திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் அம்மா. அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டு தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர். இன்றைய பிரதமர் மோடியும் போயஸ் தோட்டத்திற்கு வந்து அம்மாவை சந்தித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர் அம்மா. இவை எதையும் உணராமல் அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசி வருவது கண்டனத்திற்குரியது  என குறிப்பிட்டுள்ளார்.