மஹாளய அமாவாசையை முன்னிட்டு கரூர் காவிரி ஆற்றிற்கு ஏராளமான பொதுமக்கள் வருகையால் ஆற்றுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புரட்டாசி மாத மஹாளயஅமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களின் நாள், நட்சத்திரம், நேரம் தெரியாதவர்கள் இந்த அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் அது நேரடியாக அவர்களுக்கு சென்றடையும் என்பது ஐதீகம். 




இந்த நிலையில் மகாளய அமாவாசை தினமான நேற்று கரூர் காவிரி ஆற்றங்கரையோரம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். முன்னதாக நெரூர் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி சூரியனை வணங்கி பிராத்தனை செய்தனர். 


 




குறிப்பாக நெரூர் சதாசிவம், காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தால் காசிக்கே சென்று கொடுத்தற்கு சமம் என்ற ஐதீகம் உண்டு என்பதால் அப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் மக்கள் கூடியுள்ளனர். அதேபோல காலை அமாவாசை ஒட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் பொது மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.


கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனுார் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் அருகில், தவிட்டுப்பாளையம் காவிரி ஆறு, வாங்கல் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


 


 




ஆனால், மற்ற இடங்களை விட நெரூர் காவிரி ஆற்றிற்கு பொதுமக்கள் வருகை அதிகமாக காணப்பட்டதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலை போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் ஊர்ந்து சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.