சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். சிறந்த மாநகராட்சிக்கான மாண்புமிகு முதலமைச்சர் விருது மற்றும் சிறந்த நகராட்சி நிர்வாகங்களுக்கான வருடாந்திர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வுசெய்யப்படும் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரொக்கப்பரிசும் சிறந்த நகராட்சி நிர்வாகங்களாகத் தேர்வு செய்யப்படும் நகராட்சிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் பரிசளிக்கப்படும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2021-22) சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ’மாண்புமிகு முதலமைச்சர் விருது’ம் பரிசுப்பணமாக ரூபாய் 25 லட்சமும் வழங்கப்படும். இதையடுத்து சிறந்த மூன்று நகராட்சி நிர்வாகங்களாக உதகமண்டலம், திருச்செங்கோடு மற்றும் சின்னமன்னூர் ஆகியவை முறையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உதகமண்டலம் நகராட்சிக்கு 15 லட்சமும், திருச்செங்கொடு நகராட்சிக்கு 10 லட்சமும் மற்றும் சின்னமனூர் நகராட்சிக்கு 5 லட்சமும் பணம் பரிசளிக்கப்படும். இந்த பரிசுகளை சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்குவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






இதுதவிர சிறப்பாகச் செயல்படும் மூன்று பேரூராட்சிகளுக்கான முதலமைச்சர் விருதுகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதற்கான பரிசுத்தொகையாக 18 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு அவை பிரித்து அளிக்கப்படும். இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லக்குடி, கடலூர் மாவட்டத்தின் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் சிவகங்கையின் கோட்டையூருக்கு இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகைகள் பிரித்து அளிக்கப்படுகின்றன. முதலிடம் பிடித்த கல்லக்குடிக்கு 10 லட்ச ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்த மேல்பட்டாம்பாக்கத்துக்கு 5 லட்ச ரூபாயும் கோட்டையூருக்கு 3 லட்ச ரூபாய் ரொக்கத் தொகையும் முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின நிகழ்வுகள் அன்று வழங்குவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.