Thandora: தண்டோராவுக்கு தடை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஜாதிக்கும் சனாதனத்திற்கும் சம்மட்டி அடி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முரசு கொட்டுவது என்பது பண்டைய காலம் முதலே வழக்கத்தில் உள்ளது. இன்றைக்கும் அரசின் அறிவிப்புகளை அதிகாரிகள் தண்டோரா மூலம் மக்களிடத்தில் கொண்டு செல்கின்றனர். தண்டோரா போடும் பணியினை துப்புரவாளர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்கள் சாமி என தங்கள் அறிவிப்பை முடிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் தண்டோரா தேவையில்லை எனவும் தண்டோராவுக்கு தடை விதிக்கவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பமும் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை, ஒலி பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலைமுடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே தண்டோரா போடக் கடுமையாக தடை விதிப்பது நல்லது, மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தனது டிவிட்டர் பக்கத்தில், அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும். எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் ‘திராவிட மாடல்' அரசு வெல்லட்டும் என டிவீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்