தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய்(Vijay) அறிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.  


முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விஜய் கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.


வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டி இடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


அரசியல் மற்றொரு தொழில் அல்ல


இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.


தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடன்


எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாகக் கருதுகிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், நடிகர் விஜய் திரைத் துறையில் இருந்து விலகுகிறார் என்று அறிய முடியகிறது.