தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மீது ஆர்வம் கொண்ட விஜய், அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அரசியல் கட்சியைத் தொடங்கினார்.


விஜய்யின் முதல் அரசியல் மாநாடு:


நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் ஆர்வத்துடன் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். கட்சியைத் தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய், வேறு ஏதும் அரசியல் நிகழ்வுகளில் பெரியளவில் தலையிடாமல் இருந்து வருகிறார்.


இருப்பினும், மாணவர்களுக்கு வழங்கிய கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம்:


திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த பகுதியில் நேற்று மாலை அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


பொதுவாக தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடும் தலைவர்கள் தங்களது முதல் அரசியல் மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் தொடங்குவது வழக்கம். அரசியல் ரீதியாக தங்களுக்கு அதை ஒரு ராசியானதாக அவர்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யும் தனது முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் தொடங்க உள்ளார். இந்த தகவலால் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


படப்பிடிப்பு பணிகளும் தீவிரம்:


கோட் மற்றும் மற்றொரு புதிய படத்தையும் முழுவதுமாக முடித்துவிட்டு தனது முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்த உள்ளதாக ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்திருந்தார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை மையமாக கொண்டு அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டில் என்ன பேச உள்ளார்? என்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும், த.வெ.க. தொண்டர்கள் மத்தியிலும் மற்ற கட்சியினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் விரைவில் வெளியாக உள்ளது. அவரது அடுத்த படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.