தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். 


இறைவனுக்கு உருவம் கிடையாது, ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாற்றிய வள்ளலார், தை மாதத்தில் முக்தி அடைந்ததால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.   வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு, தமிழ்நாடு  மட்டுமின்றி உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் நேரில் வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வர்.


ஜோதி தரிசனம்:


வள்ளலார் ஞானசபையில், கண்ணாடிக்கு முன்னால் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதியை தரிசிப்பதே ஜோதி தரிசனம் என்பது அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு 152வது ஆண்டாக ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது.


கொடியேற்றம்:


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.  காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் அந்த கிராமவாசிகளால் கொடியேற்றப்பட்டது. அதேபோன்று, நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் அந்த கிராமவாசிகளும், பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் அப்பகுதி மக்களும் கொடியேற்றிவைத்து விழாவினை தொடங்கிவைத்தனர்.


தரிசனம் எப்போது?


கொடியேற்றத்தை தொடர்ந்து நாளை காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திரு அறை தரிசனம் நடைபெறும்.


வடலூர் வரலாறு:


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் வள்ளலார் அவதரித்தார். தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை வைத்திய முறைகளில் தீர்த்து வைத்தவர். யாரும் பசியால் இறக்க கூடாது என்ற எண்ணத்தில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கினார். இதனால் ராமலிங்க அடிகளார் எனும் அவர் வள்ளலார் என போற்றப்படுகிறார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார்.


பசித்த வயிறுக்கு உணவு வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது.


முதல் ஜோதி தரிசனம்:


ஜோதியுடன் கலந்த வள்ளலார் இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் கடந்த 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.