இல்லம் தேடிக் கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள 182 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நியமனம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு , நகராட்சி உயர்‌, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை மேம்படுத்துவதற்காகவும்‌, கொரோனா காலத்தில்‌ மாணவர்களிடையே எற்பட்டுள்ள கற்றல்‌ இழப்பு மற்றும்‌ இடைவெளியை சரிசெய்வதற்காகவும்‌, பள்ளிகளில்‌ தேர்ச்சி சதவிகிதம்‌ குறையாமல்‌ இருப்பதற்காகவும்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ நலன்‌ கருதி இல்லம்‌ தேடிக்‌ கல்வி, எண்ணும்‌ எழுத்தும்‌ கட்டகங்கள்‌, மொழிபெயர்ப்பு, மின்‌ பாடப்பொருள்‌ தயாரிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும்‌ பொருட்டு கல்விப்பணிகளில்‌ ஈடுபட்டிருக்கும்‌ தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்‌ , பட்டதாரி ஆசிரியர்கள்‌ , முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்குப்‌ பதிலாக அவர்கள்‌ பணிபுரியும்‌ பள்ளிகளில்‌ தற்காலிக ஆசிரியர்களைக்‌ கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டியுள்ளது.


இதனைத்‌ தொடர்ந்து 111 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்‌. 32 பட்டதாரி ஆசிரியர்களும்‌, 39 இடைநிலைஆசிரியர்களும்‌, ஆகமொத்தம்‌ 182 ஆசிரியர்கள்‌ மாற்றுப் பணியில்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்காகப்‌ பல்வேறு கல்விப்‌ பணியாற்றி வருகின்றனர்‌. இவர்கள்‌ பணிநிறைவடைய இன்னும்‌ சிறிது காலம்‌ ஆகும்‌ என்பதால்‌, இவர்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மை குழுக்களின்‌ மூலம்‌ தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்திக்‌ கொள்ள கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


* முதலில் ‌3 மாதங்களுக்கு மட்டும்‌ தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின்‌ வாயிலாக, அந்தந்த ஊர்களில்‌ பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும்‌ அருகாமையில்‌ உள்ள பகுதியில்‌ உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமையாசிரியர்‌, பணியில்‌ மூத்த ஆசிரியர்‌, மற்றும்‌ உதவித்‌ தலைமையாசிரியர்‌ (உயர்‌ / மேல்நிலைப்பள்ளிகளில்‌) ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழு மூலமாக தேர்வு செய்து தற்காலிகமாக நிரப்பிக்‌ கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்‌போது இது முற்றிலும்‌ தற்காலிகமானது என்பதை நியமனம்‌ செய்யப்படும்‌ நபர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்‌. தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமிக்கும்பொழுது எவ்வித புகாருக்கும்‌ இடமளிக்காமல்‌ இக்குழு தேர்வு செய்தல்‌ வேண்டும்‌.




* இவ்வாறு பள்ளி மேலாண்மை குழுவின்‌ வாயிலாக தற்காலிகமாக நியமனம்‌ செய்யப்படும்‌ இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.7500,- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.10.000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.12.000 வீதம்‌ மதிப்பூதியம்‌ வழங்கப்படும்‌.


* இணைப்பில்‌ கண்டுள்ள ஆசிரியர்களுக்குப்‌ பதிலாக அதே பாடப்பிரிவில்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ தொய்வின்றி நடப்பதற்காக மட்டுமே தற்காலிகமாக அந்தந்த ஆசிரியர்‌ பணிக்கான தகுதி பெற்ற நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின்‌ வாயிலாக பணி அமர்த்த வேண்டும்‌.


* மாநில இயக்ககத்தில்‌ பணிகளில்‌ ஈடுபட்டிற்கும்‌ ஆசிரியர்கள்‌ தங்கள்‌ பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும்‌ பள்ளி மேலாண்மை குழு மூலம்‌ நிரப்பப்படும்‌ தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும்‌.


* இதற்கான செலவினத்‌ தொகை  MMER தலைப்பின்கீழ்‌ மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதுசார்ந்த நிதி MMER தலைப்பில் இருந்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படும்‌ என்பது தெரிவிக்கலாகிறது. தற்காலிக நியமனம்‌ செய்தபிறகு அதற்குரிய தொகை கோரப்படும்‌ பட்சத்தில்‌, உரிய தொகை மாவட்டங்களுக்கு மாநில திட்ட இயக்கத்திலிருந்து விடுவிக்கப்படும்‌.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.